"ராசா மாதிரி காலையில சாப்பிடு, ஒரு இளவரசன் போல மத்தியானம் சாப்பிடு, சாப்பாட்டுக்கே வழியில்லாதவன் போல ராத்திரி சாப்பிடு!"காலை உணவு என்பது ஒரு நாளின் மிகவும் முக்கியமான உணவு என்பது அனைவருக்கும் தெரியும்.ஆனால் தற்போதைய அவசர உலகில் காலை உணவை சாப்பிடுகிறார்களே தவிர, அது ஆரோக்கியமானதாக என்று யாரும் பார்ப்பதில்லை. வெறும் காலை உணவை சாப்பிட்டால் மட்டும் உடல் ஆரோக்கியம் மேம்படாது, சரியான உணவைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டால் மட்டுமே உடல் ஆரோக்கியம் மேம்படும்.ஏனெனில் காலை உணவு மிகவும் முக்கியமானது. காலையில் சரியாக சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கலோரிகளை திறமையாக கரைக்கலாம். மேலும் காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய ஆற்றலைப் பெற முடியும்.ஆனால் எப்போது ஒருவர் காலை உணவைத் தவிர்க்கிறாரோ அப்போது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக பராமரிக்காமல் போகும்.
மேலும் ஆய்வு ஒன்றிலும் காலை உணவை உண்பதால் கவனச்சிதறல் குறையும், பிரச்சனைகளை சரிசெய்யும் திறன் அதிகரிக்கும், மூளை சிறப்பாக செயல்படும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் தவறாமல் காலை உணவை உட்கொள்ள வேண்டியது அவசியம்.சில மக்கள் உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று காலை உணவைத் தவிர்க்கின்றனர். ஆனால் அப்படி செய்வதால், மெட்டபாலிச அளவு குறைந்து, உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல்,உடல் எடையைக் குறைப்பதே கஷ்டமாகிவிடும். அதுமட்டுமின்றி, இப்படி காலை உணவைத் தவிர்த்தால், பின் பசியின் அளவு அதிகரித்து, பின் மதிய வேளையில் நன்கு மூக்கு பிடிக்க சாப்பிட்டு, இதனால் உடலில் கலோரிகள் அதிகரித்துவிடுகிறது.